நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு தமிழக பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு. நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “விஜயகாந்த் மிகச் சிறந்த மனிதர். அவர் பயணித்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். சினிமா துறையில் யார் எல்லாம் சாதிக்க முடியாது என்று சொன்னார்களோ, மாநிறம் உடையவர்களுக்கு இடம் இல்லை என்று சொன்னார்களோ அதனை எல்லாம் உடைத்து சினிமா துறையில் முத்திரை பதித்து தென்னிந்திய சினிமாவில் முக்கிய புள்ளியாக விளங்கி தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என கோலோச்சினார். அதன் பிறகு அரசியலுக்கு வந்து இரு பெரும் துருவங்கள் இருக்கும்போது மூன்றாவது மனிதருக்கு இடம் இருக்கிறது எனக் காட்டி ஏழைகளின் குரலாக இருந்தவர்.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே விஜயகாந்த் உடலை ராஜாஜி அரங்கத்தில் வைத்து அஞ்சலி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி விஜயகாந்த் குடும்பத்தினர் விரும்பினால் மெரினா கடற்கரையில் கூட இடம் ஒதுக்கித் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.