நீட்டுக்கு இன்று வெவ்வேறு ஆட்களின் மீது திமுக பழியைச் சுமத்துகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் 'பாமகவின் ஆதரவு இல்லாமல் அதிமுக வெற்றி பெறாது என டிடிவி தினகரன் தெரிவித்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''அவரை நாங்கள் ஒரு கட்சிக்காரராகவே பொருட்படுத்துவதில்லை. அவருடைய பேச்சுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி எல்லாம் சொல்லி தான் ஊடகத்தில் அவர் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்'' என்றார்.
தொடர்ந்து 'ஆளுநர் இன்று நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்து போட மாட்டேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது' குறித்த கேள்விக்கு, ''ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டுக்கு விலக்கு வாங்குவோம் என்று எவ்வளவு அழகாக பொய் பேசினார்கள். சட்டத்தைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. நீட் முடிவு அவர்கள் கையில் இருப்பதை போன்று இளைஞர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி வாக்கு பெற்றார்கள். ஆட்சிக்கு வருவதற்காக கவர்ச்சிகரமான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வென்றார்கள். ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். எங்கே ரத்து செய்தார்கள்? இவர் கையெழுத்துப் போட்டால் ரத்து செய்து விட முடியுமா? ஆனால் நீட்டுக்கு இன்று வெவ்வேறு ஆட்களின் மீது பழியை சுமத்துகிறார்கள். இதுதான் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. இரட்டை வேடம் போடுகின்ற கட்சி திமுக என்பது நிரூபணம் ஆகி உள்ளது'' என்றார்.