தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று முன் தினம் (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தது. இன்று (17-01-24) காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன் தினம் (15-01-24) 7 மணிக்கு தொடங்கி மாலை 5:15 மணிக்கு நிறைவு பெற்றது. இதில், 851 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடினர். முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலையொட்டி நேற்று (16-01-24) மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 14 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றுள்ளார். சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், காணும் பொங்கலையொட்டி இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.