மதுரை பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.
தற்போது வரை 9 சுற்றுகள் நடைபெற்று தற்போது இறுதி சுற்று துவங்கியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும்.
ஒன்பதாவது சுற்று முடிவில் 710 காளைகள் பங்கேற்றுள்ளது. கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். 14 காளைகளை அடக்கி அபிசித்தர் இரண்டாவது இடத்திலும் 12 காளைகளை அடக்கி திவாகர் மூன்றாவது இடத்தில் உள்ளனர். முதல் இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தமாக இதுவரை 78 பேர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்துள்ளனர். 28 வீரர்கள், 16 காளை உரிமையாளர்கள், 27 பார்வையாளர்கள், 6 காவலர்கள், ஒரு பணியாளர் என மொத்தம் 78 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 11 பேருக்கு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலிடத்திற்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இறுதிச் சுற்று விறுவிறுப்பு அடைந்துள்ளது