Skip to main content

“அவனோட அப்பா மனநோயாளி; குடும்பத்த பார்க்க கூட ஆள் இல்ல”- உயிரிழந்த அஜித் ரசிகரின் உறவினர் கண்ணீர் மல்க பேட்டி

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

Ajith fan's tragedy case relative interview

 

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு'  படங்களை நோக்கி உள்ளது. 

 

இருவரின் ரசிகர்களும், அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வெளியாகியுள்ளதால், திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதன்படி அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கும், விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் சிறப்புக் காட்சிகளாகத் திரையிடப்பட்டது. இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே ரசிகர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விஜய் மற்றும் அஜித் பேனர்கள் கிழிக்கப்பட்டதும், திரையரங்கு கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. 

 

இந்நிலையில், துணிவு படக் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் பரத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். சென்னை ரோகிணி திரையரங்கம் முன்பு சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது ஏறி பரத்குமார் நடனமாடிய போது கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதுகுறித்து பரத்குமாரின் உறவினர் (அத்தை) செய்தியாளர்களைச் சந்தித்தார், “என் பையன் கஷ்டப்படுபவன் தான். என் அண்ணன் மகன். வேலையை முடித்துவிட்டு அஜித் படம் பார்க்க வந்தான். அப்பொழுது இப்படி ஆகிவிட்டது. நீங்கள் எவ்வளவு பெரிய ரசிகராக வேண்டுமானாலும் இருங்கள். கொஞ்சம் குடும்பத்தைப் பாருங்கள். இப்பொழுது இவன் போய்விட்டான். இவன் குடும்பத்தைப் பார்க்க ஆள் கிடையாது. 

 

அவன் அம்மா வீட்டு வேலை செய்கிறார். அவரது தந்தை மனநோயாளி. அவன் குடும்பத்தை யார் பார்ப்பார். நான் என் கணவனை இழந்துவிட்டேன். என் வீட்டுக்காரர் கூட விஜய் ரசிகர் தான். இப்பொழுது எங்களுக்கு யாரும் வந்து சோறு போடவில்லை. நான் வீட்டு வேலை செய்து, நானே என்னை பார்த்துக்கொள்கிறேன். 

 

எல்லா வயசுப் பசங்களும் உங்க அம்மா, அப்பா, உங்களுடன் பிறந்தவர்களை நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு எந்த நடிகர்களும் பெரிதாகத் தோன்ற மாட்டார்கள். உங்க அப்பாக்கு ரசிகராக இருங்கள். உங்கள் அம்மாவை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்” என வருத்தம் கலந்த ஆதங்கத்துடன் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்