அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து இடைக்கால ஜாமீன் மனுவும், அமலாக்கத்துறை சார்பில் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நடந்தது. மேற்குறிப்பிட்டுள்ள மற்ற இரு மனுக்கள் மீதும் நேற்று விசாரணை நடந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறையையே பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றவும் அனுமதி அளித்தது.
மேலும், இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை விரும்பினால் அவர்கள் முடிவு செய்யும் மருத்துவ நிபுணர்கள் குழு செந்தில் பாலாஜியை பரிசோதிக்கலாம். அவரது உடல்நிலையை, சிகிச்சையை ஆராயலாம் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்ய மத்திய மருத்துவக் குழுவான எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வரவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.