![jayakumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/3f7jbUqLrVzmCkjwTN1_shQadxfleHKIoq2TI4vDbQk/1613628684/sites/default/files/inline-images/tryyeyer.jpg)
இன்று (18.02.2021) தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், நேற்று புதுச்சேரி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி மீது பெண்கள் குற்றச்சாட்டுகளைக் கூற, மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமியோ அவருக்கு ஆதரவான கருத்துக்களாக மொழிபெயர்ப்பு செய்தது பற்றிய கேள்விக்கு, “பொதுவாக மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. அந்தக் கலையைத் தெரிந்தவர்கள் முதலில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். உங்களைப்போல நானும் அதைப் பார்த்தேன். திரித்துச் சொல்வதென்பது வேதனைக்குரிய விஷயம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா எடுத்த நிலையைத்தான் நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி தற்போதைய அதிமுக தலைமையும் எடுக்கும். நிச்சயமாகத் தெரிகிறது, புதுச்சேரியில் அதிமுக ஆட்சி வரும் என்று. முதன்முதலில் கட்சி ஆரம்பித்தவுடன் அதிமுக முதலில் ஆட்சியைப் பிடித்த மாநிலம் புதுச்சேரிதான். அந்தநிலை மீண்டும் புதுச்சேரியில் வரும்'' என்றார்.