தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அதிமுக தன்னை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொண்டது. அதனையடுத்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தற்போதுவரை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், இன்று (14.06.2021) மதியம் 12 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இடையே இப்பதவிகளைப் பெறுவதற்காக கடும் போட்டி நிலவுவதால், இதுகுறித்து ஏற்கனவே பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்த போஸ்டர் சர்ச்சைகள், தொடர்ச்சியாக வெளியான சசிகலா ஆடியோ போன்றவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.