காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில், நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் இத்திட்டத்தை தங்கள் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தொடங்கி வைக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த வகையில், அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மதுரை உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ, சீமானுத்து அரசு தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். கட்சியில் இருந்து யாரும் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கக் கூடாது என அதிமுக தலைமை, தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன் கலந்துகொண்டது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே எம்.எல்.ஏ அய்யப்பன் ஓபிஎஸ் ஆதரவாளர் என்று தகவல் வெளியாகியுள்ளது.