கத்தார் ஆம்பல் சங்கம் மற்றும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து 2 மணி நேரம் புத்தக வாசிப்பு அடிப்படையிலான, உலக சாதனை முன்னெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா கால கட்டத்தில், இணையவழி பாட முறையினால் மாணவர்களிடையே வாசிப்புத்தன்மை என்பது குறைந்துவிட்டது. மேலும் ஆன்ட்ராய்ட் போன் ஆதிக்கத்தால் பொதுமக்களிடையேயும் வாசிப்புத்தன்மை அருகி வருகிறது. இந்நிலையில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் கத்தாரிலுள்ள ஆம்பல் தமிழ்ச் சங்கம் உலகிலுள்ள 45 நாடுகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசிப்பு ஆர்வம் உடையோர் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளும் உலக சாதனை முன்னெடுப்புக்கான இடைவிடாத இரண்டு மணி நேர புத்தக வாசிக்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது.
அதன் ஒரு பகுதியாக விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 700 மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில பாட நூல்கள், இலக்கியம், இலக்கணம், அரசியல், பொது அறிவு, வரலாறு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்களை அமைதியாக வாசித்தனர். இந்த இரண்டு மணி நேரத்தில் இயற்கை உபாதைகளுக்காக இருக்கையை விட்டு எழுந்து செல்லவோ, அலைபேசிகள் பயன்படுத்தவோ மறுக்கப்பட்டு இடைவிடாமல் வாசித்தனர்.
வாசிப்புத் திறனை மேம்படுத்தும் இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் கோ.ராஜவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வே.சண்முகம் வரவேற்புரையாற்றினார். தமிழ்த் துறை பேராசிரியர் கி.சிவக்குமார் முன்னிலை உரையாற்றினார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சி.சுந்தரபாண்டியன், செயலாளர் கரு.காசிவிஸ்வநாதன், பொருளாளர் ஜெ.அப்துல்லா, துணைத்தலைவர் புஷ்பதேவன், துணைச் செயலாளர் ரவிக்குமார், மூத்த நிர்வாகிகள் முருகன், ரெங்கப்பிள்ளை, வழக்கறிஞர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி ஆசிரியர் மன்ற செயலாளர் மகேஷ் நன்றி கூறினார்.
"கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு மொபைல் போன் வருகை, சமூக வலைதளங்களின் ஆதிக்கம், கொரோனா காலகட்ட இணையவழிக் கல்வி என பொதுமக்கள், வாசகர்கள், இளம்தலைமுறையினர், மாணவர்களிடையே வாசிப்புத்திறன் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. எனவே இளம் தலைமுறையினரிடம் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு மணி நேரம் இடைவிடாத உலக சாதனைக்கான முன்னெடுப்பு நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள 45 நாடுகளில், ஒரே நேரத்தில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில், நூலகங்களில், சமூக அரங்குகளில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த இடைவிடா வாசிப்பு நிகழ்ச்சி வீடியோ பதிவுகளாக்கப்பட்டு உலக சாதனைக்காக முன்னெடுக்கப்படுகிறது" என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.