அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்பு அதிமுக தலைமை அறிவித்திருந்தது. முதற்கட்டமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த இரண்டு பதவிகளுக்கும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாததால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்திய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் அறிவித்தார். இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிளைக் கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தலை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (13.12.2021) காலை சேலத்தில் தொடங்கிவைத்தார்.
19 மாவட்டங்களில் முதற்கட்டமாக இன்று தொடங்க உள்ள தேர்தல் நாளைவரை நடைபெற உள்ளது. இதில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிடுவார்கள். பெரும்பாலும் கட்சியின் பெரிய பதவிகளுக்குப் போட்டி இருக்காது என்றும், மாவட்டங்களில் தற்போது இருப்பவர்களே தேர்தலில் போட்டியின்றி வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று நடைபெறவுள்ள தேர்தல் நிறைவடைந்தவுடன் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 35க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள்.