Skip to main content

அதிமுக பிரமுகர் கொலை; திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
AIADMK leader killed; 8 people including DMK executive arrested

சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

AIADMK leader killed; 8 people including DMK executive arrested

இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வார்டு கவுன்சிலரின் கணவரான திமுக நிர்வாகி சதீஷ் அந்தப் பகுதியில் லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சண்முகமும் சதீஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்து லாட்டரி விற்பனை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இவர்களுக்குள் தொழில் மற்றும் அரசியல் ரீதியாகவும் போட்டி ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து விரோதிகளாக இருந்து வந்தனர். இந்நிலையில் சதீஷ் தனிப்பட்ட முறையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததால் அது குறித்து சண்முகம் காவல்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சதீஷ் அதிமுக நிர்வாகி சண்முகத்தை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

சார்ந்த செய்திகள்