தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் சாலைகளில் நேற்று மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக நேற்று முதல் அமைச்சர்கள் மழை நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளிலும் மாநகராட்சி நிர்வாகிகளை ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்றும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மழை நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “கடந்த 2 நாட்களாக மழை பெய்து தெருக்களில் தண்ணீர் தேங்காமல் இருந்ததற்கு சென்னை மக்கள் தமிழக அரசை பாராட்டுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பழைய அரசாங்கம் செய்திருக்குமென்றால் நமக்கு வேலைகள் இருக்காது. அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்யட்டும் என நமக்கு விட்டு விட்டுச் சென்றார்கள்.
அமைச்சர்கள் அவர்களது பகுதிகளை ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் கேட்பதை நானும் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் ஒருங்கிணைத்து செய்து கொடுக்கிறோம். சென்னையில் இனி எங்கும் தண்ணீர் தேங்காத அளவிற்கு எங்கள் பணிகள் இருக்கும். பருவமழை வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போன வாரமே துவங்கிவிட்டோம். பருவ மழையை எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது. மழை நீர் வடிகால் பணிகள் ஏறத்தாழ 80% அளவிற்கு முடிந்துள்ளது. ஒவ்வொரு பணிகளையும் பார்த்து பார்த்து செய்து வருகிறோம். சென்னைக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்கும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள மழைநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொசஸ்தலை ஆறு, கோவளம் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 119 கிமீ நீளத்திற்கு 4900 கோடி ரூபாய் அளவிலான பணிகளை திட்டமிட்டு தொடங்கினார். அப்பணிகள் இப்போது 50% நிறைவடைந்துள்ளன. இன்னும் ஓராண்டு காலத்தில் அப்பணிகள் நிறைவடைந்துவிடும். 100% பணிகள் நிறைவுறும் போது சென்னை எப்படி மழை நீர் பாதிப்பில்லாத சென்னையாக இருக்கிறதோ அதே போல் புறநகர் சென்னை பகுதிகளிலும் மழை நீர் பாதிப்பில்லாத சென்னையாக மாறும்” எனக் கூறினார்.