புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளைக்கொல்லை கிராமத்தில் கிராமச் சாலைகள் திட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்து புதிய பேருந்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை(26.7.2024) நடந்தது.
இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சரின் கார் நின்ற இடத்தில் அ.தி.மு.க மாஜிக்கள் ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிச்சாமி, விராலிமலை விஜயபாஸ்கர் படங்களுடன் கூடிய பதாகை ஒன்று பளிச்சிட்டது. இதனை அதிமுக பிரமுகர் அ.க.முத்து படத்துடன் வைத்திருந்தனர்.
அந்தப் பதாகையில் மாஜிக்கள் முயற்சியில் புதிய பேருந்து வசதி கிடைத்திருப்பதாக வாசகங்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்தப் பதாகை இருப்பதை திமுக ஒன்றிய நிர்வாகிகள் பார்த்தும் பார்க்காதது போல இருந்துவிட்டனர். ஆனால் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் இந்தப் பதாகையைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு அங்கிருந்த சில திமுகவினர் அந்தப் பதாகையை அகற்றச் சொல்லித் தூக்கிச் சென்றனர்.
இதனையடுத்து அமைச்சரை அதிமுக பிரமுகர் முத்து சமாதானம் செய்ய முயன்றார். தொடர்ந்து புதிய பேருந்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன், விழாவில் பேசும் போது, “இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்ததை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று ரூ.7 கோடி மதிப்பீட்டில் கிராமச்சாலையாக மாற்றி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அறந்தாங்கி - ஆலங்குடி செல்லும் இருவழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புதிய பேருந்து இயக்க தடையாக இருந்த மின்கம்பிகளும் மாற்றப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக அதிமுக பிரமுகர் அ.க.முத்து பேசும் போது, “இங்கு ஒரு நிகழ்ச்சியைச் செய்திருக்கிறார்கள். அது என்னைப் பொறுத்தவரை அமைச்சர் மற்றும் சேர்மன் ஆகியோருக்கு தெரியும். அரசியல் என்பது தேவைப்பட்ட நேரத்தில் பயன்படுத்துகின்ற பண்பு. நான் எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டன் என்ற அடிப்படையிலே இதுவரை யாரேனும் குற்றம் சொல்லும் அளவில் நடக்கவில்லை. அமைச்சர் வருந்த வேண்டாம். நடந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் வருந்துகிறோம். உணர்வு என்பது வேறு; உணர்ச்சி என்பது வேறு. உணர்ச்சியின் உந்துதலால் அதை வைத்திருக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு தொண்டர்கள் செய்துவிட்டார்கள். தாங்கள் செய்த நல்ல காரியத்திற்குப் பாராட்டுகிறோம்” என்று அதிமுக மாஜிக்கள் படத்துடன் பதாகை வைத்ததற்கு பொது மேடையிலேயே அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வருத்தம் தெரிவித்துவிட்டு அமைச்சரின் அருகிலேயே அமர்ந்திருந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.