ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனையில் ஓ. பன்னீர்செல்வம் அடுத்த மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை 5.7.2023 - புதன் கிழமை காலை 9 மணிக்கு, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை, ஓபிஎஸ் அடுத்து நடத்த இருக்கும் மாநாடு, அதிமுக - பாஜக கூட்டணி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேச வேண்டும். எங்களுடன் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுகுறித்த அறிவிப்பு தேர்தல் சமயத்தில் வெளியிடப்படும். கொங்கு மண்டலம் என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை. அங்குள்ள தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள்'' எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.