மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' எனத் தலைப்பிடப்பட்ட அதிமுக மாநாடு நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 51 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தமாக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேநேரம் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்காக மூன்று நாட்களுக்கு முன்பாகவே உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஏ, பி, சி என மூன்று கவுண்டர்களில் உணவுகள் சமைக்கப்பட்டது. இதற்கான வெங்காயம் உரித்தல் மற்றும் காய்கறிகளை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அக்கம்பக்கம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்மணிகள் வந்திருந்தனர். இப்படி தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் மாநாட்டில் உணவு டன் கணக்கில் சமையல் கூடத்திலேயே கீழே கொட்டப்பட்ட நிகழ்வு உண்மையிலேயே பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவோ ஏழை எளிய மக்கள் ஒருவேளை உணவு கூட இல்லாமல் ஏங்கித் தவிக்கும் நேரத்தில் இப்படி சமைத்த உணவை கீழே கொட்டியுள்ளது தங்களுக்கே பெரும் மனக் கஷ்டத்தை தருவதாக அங்கு சமையல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர். உணவு ஒப்பந்ததாரரோ, சாம்பார் சாதம் சூடாக கிடைத்ததால் மாநாட்டுக்கு வந்தவர்கள் அதைமட்டும் சாப்பிட்டுவிட்டு புளியோதரையை விரும்பி சாப்பிடவில்லை. காலையில் பாத்திரங்களை எடுக்க வந்தபோது இவ்வளவு உணவு கீழே கொட்டப்பட்டு கிடந்தது எனத் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தின் அருகிலேயே இப்படி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் உணவுக் கழிவுகள், பாக்குமட்டை தட்டுகள் கிடப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அடிக்கடி தான் ஒரு விவசாயி, விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என மார்தட்டிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி நேற்றும் தான் ஒரு விவசாயி அதுவும் வியர்வையை ரத்தமாக சிந்தி உணவை உருவாக்கும் விவசாயி எனப் பேசியிருந்தார். ஆனால் அதற்கு மாறாக இன்று நடந்திருக்கும் இந்த நிகழ்வு கண்டனத்தையும் பெற்று வருகிறது. குறைந்தபட்சம் அதிமுக மாநாடு ஏற்பாட்டாளர்கள் மீதமான உணவை அக்கம் பக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பியிருந்தால் கூட பிரயோஜனப்பட்டிருக்கும். அல்லது அதை முறையாக அகற்றியிருக்கலாம் இப்படி விழா பந்தலிலேயே கொட்டிவிட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.