தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வேளாண்துறைக்குத் தனி பட்ஜட், விவசாயிகளுக்கு விலையில்லா இடுபொருட்கள், ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் கிடைக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பல்வேறு திட்டங்களை அறிவித்துவருகிறது. கடந்த ஆட்சியைவிட தற்போது நடைபெறும் ஆட்சியில் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் செயல்படுவதாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துவருகிறார்கள்.
அதேநேரத்தில் வேளாண் அலுவலர்கள் அரசு அறிவிக்கும் திட்டங்கள், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் உள்ளிட்ட எந்தத் தகவலையும் உண்மையான விவசாயிகளுக்குத் தெரிவிப்பது இல்லை. ஊருக்கு நான்கு பேரை தரகர்கள் போல் வைத்துக் கொண்டு அவர்களிடமே அனைத்தையும் கூறுகிறார்கள். இதனால் உண்மையான விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கற்பனைச்செல்வம் கூறுகையில், “கிள்ளை என்பது காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாக உள்ளது. இதன் சுற்றுவட்ட பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் ஒரு போக சாகுபடி செய்துவருகிறார்கள். சில இடங்களில் இருபோக சாகுபடியும் நடைபெறுகிறது. பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள வேளாண் அலுவலர்கள், விவசாயிகளுக்கு அரசின் வேளாண் திட்ட செயல்பாடுகள்; அதனால் விவசாயிகளுக்கு எவ்வாறு பயன் ஏற்படுகிறது; சூழலுக்கு ஏற்ற, என்ன பயிர் நடவு செய்யலாம்; தோட்டக்கலை மூலம் என்ன பயன்கள் உள்ளன என எதையும் விவசாயிகளிடம் தெரிவிப்பது இல்லை. விவசாயிகள் கூட்டம் நடத்தினால், உண்மையான விவசாயிகளுக்குத் தகவல் சொல்வது இல்லை. கூட்டத்தில் அவர்கள் கொடுக்கும் டீ, பிஸ்கட்டை சாப்பிட்டு எந்தக் கேள்வியும் கேட்காதவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். இதுகுறித்து பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநருக்குப் புகார் கூறலாம் என அவரை தொடர்புகொண்டால் அவர் விவசாயி என்றாலே ஏதோ கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் போல் அவரது பேச்சு அலட்சியமாகவே உள்ளது. அரசு, விவசாயிகளைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தாலும் கீழ்மட்ட விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் வேளாண் அலுவலர்கள் சுணக்கமாக செயல்படுவது விவசாய துறையை இவர்கள் கீழ்மட்டத்திற்கு கொண்டு செல்வார்களோ? என்ற அச்சம் உள்ளது” என்று தெரிவிக்கிறார்.
கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கத்தலைவர் கண்ணன் கூறுகையில், “ஒரு ஒன்றியத்திற்கு தலா ரூ. 1000 கட்டிவிட்டு 100 விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். இது விவசாயக் குழு என்று அழைக்கப்படுகிறது. இவர்களில் 15 பேர் இயக்குநர்கள் என்றும் தலைவர், செயலாளர், பொருளாளர் என்றும் மூன்று பேர் இருப்பார்கள். அரசு அந்தப் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் அறுவடை இயந்திரம், உழவு ஓட்டும் இயந்திரம், களையெடுக்கும் கருவி உள்ளிட்ட விவசாய வேலைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் இவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இதனை இவர்கள் வைத்துக்கொண்டு மற்ற விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்களுக்கும் பயன்பாட்டுக்கு கொடுப்பது இல்லை. இதனால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாய பொறியியல் துறையில் ஏற்கனவே பயன்படுத்தியவர்களுக்கே விவசாய இயந்திரம் மற்றும் கருவிகள் கொடுக்கப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் திட்டங்கள் குறித்து விவசாயி ஆலோசனை கூட்டங்கள் சம்பிரதாயத்திற்கே நடத்துகிறார்கள்” எனும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் “விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது இல்லை. யாரோ பத்து பேரை வைத்து கூட்டத்தை நடத்திவிட்டு விவசாயிகளுக்கு அனைத்து விவரத்தையும் கூறிவிட்டதாக பதிவு செய்து விடுகிறார்கள். அரசின் வேளாண்திட்டங்கள், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என கேட்கும் விவசாயிகளுக்கு விவசாய கூட்டத்திற்குத் தகவல் அளிப்பது இல்லை. விவசாயிகள் என்ற போர்வையில் புரோக்கர்கள் போல் சிலரை வைத்துள்ளனர். அவர்களிடத்தில் சில தகவல்களை கூறிவிட்டு அனைவரிடத்திலும் கூறியதாக முடித்துகொள்கிறார்கள். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வேளாண் அலுவலர்கள் செய்யும் தவறுகளை மேல் அதிகாரியிடம் தெரிவிக்கலாம் என்று பரங்கிப்பேட்டை மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய வேளாண் உதவி இயக்குநராக உள்ள சித்ராவை தொடர்புகொண்டால் அவர் ஃபோனை எடுப்பதில்லை. நேரில் சந்தித்து விவசாயிகளுக்கு ஏற்படும் குறைகளைக் கூறினாலும் அலட்சியமாகவே நடந்துகொள்கிறார். வேளாண்துறை அமைச்சர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் இருக்கும் மாவட்டத்திலே இதுபோன்று வேளாண் அலுவலர்கள் நடந்துகொள்வது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை அலட்சியப்படுத்தும் வேளாண் அலுவலர் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்றார்.
இதுகுறித்து விபரம் அறிய பரங்கிப்பேட்டை மற்றும் கீரப்பாளையம் ஒன்றியத்தின் வேளாண் உதவி இயக்குநராக உள்ள சித்ராவை தொடர்பு கொண்டோம், “நான் எல்லாவற்றுக்கும் பதில் கூறுகிறேன், தற்போது முக்கிய தொலைபேசி வருகிறது. பிறகு அழைக்கிறேன்” என தொடர்பை துண்டித்தவர் பல மணி நேரமாகியும் பதில் அளிக்கவில்லை.