திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் திருப்பதி அருள் நெறி மேல்நிலைப்பள்ளி, கொத்தயம் ஜே.ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, மஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி, சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரப்பட்டி சீனிவாசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாளையூத்து அரசு மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 3,330 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மரக்கன்றுகளை வழங்கியும் மற்றும் கோரிக்கடவில் கலைஞர் வணிக வளாக கட்டிடத்தையும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தமிழக அரசு மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக ரூபாய் 37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை அரசு பள்ளி மாணவர்களுக்காக செய்து, இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில், நான் முதல்வன் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைந்த 14 மாதங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 அரசு கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் சி.க.வலசில் பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டு, விரைவில் ஒட்டன்சத்திரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 20 கோடி செலவில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படவுள்ளது.
விரைவில் ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படவுள்ளது. மேலும் உயர்கல்வித்துறை சார்பில் ஒட்டன்சத்திரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இதுவும் சொந்த கட்டிடத்தில் கள்ளிமந்தையத்தில் செயல்படவுள்ளது. விருப்பாட்சியில் ஐ.டி.ஐ எனப்படும் தொழிற்பயிற்சி கல்லூரியும் தொடங்கப்படவுள்ளது. கேதையுறும்பில் 45 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் தொடங்கப்படவுள்ளது. காளாஞ்சிபட்டியில் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதற்காக சிறப்பு மையம் துவங்கப்படவுள்ளது. மாணவர்கள் கல்வியில் எல்லா வளங்களையும் பெற்று முன்னேற வேண்டும். இளைஞர்கள் தங்களுடைய எதிர்கால திட்டமிடல் சார்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதனை நன்கு உணர்ந்த அரசு 9- ஆம் வகுப்பிலிருந்து 12- ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 1- ஆம் தேதி முதல்வரால் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன்' எனும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அது இளைஞர்கள் தங்களது எதிர்கால திட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித்திட்டம் முன்னோடி திட்டமாக உள்ளதுடன், மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக உள்ளது" என்று கூறினார்.