Skip to main content

விவசாய கடன்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி உரை

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
thamimun ansari




04.01.2019 அன்றைய சட்டபேரவை நிகழ்வில் பேசிய நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி, கஜா புயல் பாதித்த பகுதிகளில் விவசாய கடன்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். 
 

தமிமுன் அன்சாரியின் உரை:-

 

கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இரவு வீசிய கஜா புயல் பெரும் சீரழிவை உருவாக்கிச் சென்றிருப்பதை ஒட்டுமொத்த தேசமும் பார்த்திருக்கிறது. 

 

அந்த புயல் கரையை மட்டும் கடக்கவில்லை, எங்கள் வாழ்க்கையையும் கடந்திருக்கிறது. எங்கள் மகிழ்ச்சி பூக்களைப் பறித்திருக்கிறது. எங்கள் பாட்டன், பூட்டன் நட்டு வைத்த நூற்றாண்டு மரங்களை சாய்த்திருக்கிறது. 

 

இயற்கையான பசுமை வழிச் சாலைகள் பொலிவிழந்து கிடக்கின்றன. எங்களை பரவசப்படுத்திய பறவைகளை இப்போது எங்களுடைய கானகங்களில் நாங்கள் காண முடியவில்லை. அலை கடலில் படகுகளைச் செலுத்தி, மீன் பிடித்த எங்களுடைய மீனவச் சொந்தங்கள் கண்ணீரில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

ஒட்டுமொத்தமாக, நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடிய தஞ்சை தரணியின்  கடலோரப் பகுதிகளும், உட்பகுதிகளும் பெரும் பேரழிவை சந்தித்திருக்கின்றன. இந்த இக்கட்டான தருணத்தில் மீட்பு பணியிலே முழுமையாக ஈடுப்பட்ட அனைத்து நல்லுள்ளங்களையும் இந்த நேரத்திலே நன்றியோடு நினைவூட்ட நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

 

அந்த பகுதிக்கு வருகை தந்து மக்களை ஆறுதல்படுத்திய முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித் தலைவர், அமைச்சர் பெருமக்களுக்கும் இந்த நேரத்திலே டெல்டா மக்களின்  சார்பிலே  நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். 

 

அதுபோன்று புயல் பாதித்த பகுதிகளிலே உண்மையான நிவாரணப் பணிகளிலே எல்லாரும் ஈடுப்பட்டிருந்தாலும், கதாநாயகர்களாக மக்களால் பார்க்கப்பட்டவர்கள் யார் என்று சொன்னால், மின்சார ஊழியர்கள் ஆவர். தங்களுடைய உணவைப் பற்றி கவலைப்படாமல், உறக்கத்தைப் பற்றி கவலைப்படாமல், உயிரைப் பற்றி கவலைப்படாமல் (மேசையைத் தட்டும் ஒலி) அவர்கள் ஆற்றிய பணிகளின் காரணமாக தான் இருண்டு கிடந்த டெல்டா மாவட்டங்கள் மின்னொளிக்கு வந்திருக்கின்றன என்பதை மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன். 

 

அதுபோன்று, புயல் பாதித்த பகுதிகளிலே, துப்புரவுப் பணிகளிலே ஒரு மிகப் பெரிய தியாகத்தைச் செய்தவர்கள் துப்புரவுப் பணியாளர்கள் ஆவர். அவர்களையும் நன்றியோடு இந்த நேரத்திலே நினைவுப்படுத்துகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) அதே போன்று மக்கள் கொந்தளிப்பாக இருந்த நிலையில் சட்டம்-ஒழுங்கைச் சிறப்பாக பராமரித்ததற்காக காவல்துறைக்கும்  நான் நன்றியை சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். 

 

உலகம் முழுக்க சுனாமியால் பாதிக்கப்பட்ட போது ,எப்படி ...அந்த பகுதிகளிலே மக்கள் உதவினார்களோ அதை தாண்டி மூன்று மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களில், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி வந்து நிவாரணப் பொருட்களை வழங்கிய ...தேசம் முழுக்க இருக்கக்கூடிய நல்லுள்ளங்களுக்கும் ,தேசத்தை தாண்டிய  நதிகளாய் வாழ்ந்துக்கொண்டிருக்கக்கூடிய ,உலகம் முழுவதும் இருக்கும், தமிழ் அன்பர்களுக்கும் இந்த நேரத்திலே நன்றிகளை நான் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். 

 

இப்படி உலகம் முழுக்க கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கண்ணீரோடு பலர் எட்டிப்பார்த்த தருணத்திலே.., பிரதமர் நம்மை வந்து பார்ப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், ஓர் ஆறுதல் வார்த்தையைகூட தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம் எங்களுடைய டெல்டா மாவட்ட மக்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. 

 

தமிழகத்தின் முதலமைச்சர் ரூ.15,000 கோடி நிதியை எங்களுக்கு தந்து உதவுங்கள்; அது எங்களுக்கு அல்ல; அந்த மக்களுடைய நிவாரணத்திற்கு  என்று கேட்டார்கள். ஆனால், மத்திய அரசு அதிலே 10 சதவீதத் தொகையைக்கூட வழங்காதது மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது. 

 

தமிழக அரசினுடைய நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு உடனடியாக அவர்கள் கேட்ட ரூ.15.000 கோடி நிதியைக் கொடுத்து உதவ வேண்டுமென்று இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.
 


என்னுடைய நாகப்பட்டினம் தொகுதி பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலே ஒன்று. ஆனால் அங்கே 15 நாட்கள் மின்சாரம் இல்லாத நிலையும் இருந்தது. என்னுடைய நாகப்பட்டினம் தொகுதி முழுமையாக நிவாரண உதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது. அது ஏன்? என்று தெரியவில்லை. 
 

 

எனவே முதல்வர்  இதிலே கவனம் செலுத்தி என்னுடைய நாகப்பட்டினம் தொகுதி மக்களுக்கு பிற புயல் பாதித்த பகுதிகளிலே கிடைக்கக்கூடிய அனைத்து நிவாரண உதவிகளும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும், ஒருவேளை அதற்கான வாய்ப்புகள் இல்லையென்று சொன்னால்..., எனது தொகுதியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000, நிவாரண உதவியாக வழங்க வேண்டுமென்று இந்த நேரத்திலே தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.

 

இந்த புயலிலே ஆயிரக்கணக்கான படகுகள் சேதமடைந்துள்ளன. சுனாமியின் போது 14 ஆண்டுகளுக்கு முன்பாக ஒவ்வொரு படகுக்கும் ரூ.75000, இழப்பீடாக வழங்கினார்கள். இப்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புயல் பாதிக்கப்பட்ட நேரத்திலே வெறும் ரூ.85000, மட்டுமே தமிழக அரசு அறிவித்திருக்கிறது . ஒரு படகைச் சீர்செய்ய ரூ.12 இலட்சம் வரை செலவாகிறது. எனவே வலைகள், எஞ்சின்கள், உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் கவனத்திலே கொண்டு மீனவர்களுக்கான நிவாரண தொகையை தமிழக அரசு உயர்தித்தர வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

 

தென்னை மரங்கள் தோப்பு, தோப்பாக அழிந்தது போல..., பல தோப்புகள் அழிந்திருக்கின்றன, மாந்தோப்புகள் அழிந்திருக்கின்றன, முந்திரி தோப்புகள் அழிந்திருக்கின்றன, சவுக்கு தோப்புகள் அழிந்திருக்கின்றன, சவுக்குத் தோப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. "தானே" புயலின் போது சவுக்குத் தோப்புகள் அழிந்தபொழுது, முன்னாள் முதல்வர் டாக்டர் அம்மா அவர்கள், அதற்கு நிவாரணம் அளித்திருந்ததை இந்த நேரத்திலே நினைவூட்டி, சவுக்குத் தோப்புகளுக்கும் உரிய இழப்பீடுகளை இந்த அரசு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

 

தென்னை, மா, சவுக்கு, பனை, புளி ஆகிய வருவாய் தரும் மரங்களும் இந்தப் புயலால் அழிந்திருக்கின்றன.   அந்தப் பகுதிகளில் இந்தப் பசுமைகளை மீட்டெடுக்க,  இயற்கையை சமன் செய்ய,  தமிழக அரசு இலவசமாக மரக் கன்றுகளையும், விதைகளையும் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். 

 

தொழில் செய்பவர்களுடைய கட்டமைப்புகளும் இந்த புயலால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வணிகர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வர்த்தக பொருட்களும் சேதமடைந்திருக்கின்றன. இவர்களின் தொழில்களை தொடங்க வங்கிக் கடனை வட்டி குறைப்பு செய்ய அல்லது வட்டியில்லாமல் வழங்க, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். 

 

நிவாரணத் தொகையை ECS முறையில் அனுப்ப Net வசதி இதுநாள் வரை பல இடங்களில் மேம்படுத்தப்படவில்லை. எனவே, Mobile வங்கி அமைத்து Net வசதி உடனே  விவசாயிகளுக்கு கிடைத்திட, மத்திய அரசை ,நம்முடைய தமிழக அரசு வற்புறுத்தி கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கடைசியாக ஒரிரு கோரிக்கைகளுடன் நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

 

 'அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசு இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறது. இது போதாது. ஏனென்றால், டெல்டா மாவட்டங்களில் மண் எடுப்பதற்கு கொள்ளிடத்திலிருந்தும், ஜல்லியைக் கரூரிலிருந்தும் கொண்டு வர அதிக செலவு செய்ய வேண்டி இருக்கிறது. 

 

எனவே, தமிழக முதல்வர் அவர்கள் NGO அமைப்புகள் அனைத்தையும் அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்து, ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ,90,000 பெற்று மொத்தமாக ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு ஆவண செய்ய நடவடிக்கை, எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.   

 

அரசு நிலத்தில் வீடு கட்ட ஏதுவாக, அதற்கு பட்டா வழங்கவும் ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, நாகை உள்ளிட்ட புயல் பாதிக்கப்பட்ட மாவட்டப் பகுதிகளில் குடிசைகளை முழுமையாக அகற்றி, 100  சதவிகிதம் குடிசைகளற்ற பகுதிகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். புயல், வெள்ளம் ஆகிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மின்சார வொயர்களை,  Cable-களைத் தரையில் புதைக்கும் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும். 
 

தற்போது நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அந்த திட்டம் செயல்பாட்டில் வந்துள்ளதுதை  நான் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

 

அதேபோன்று மின்சாரக் கட்டணத்தை புயல் பாதிக்கப்பட்ட பகுதியிலே , அதனை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யக்கூடிய நிலை இல்லையென்றால், ஏற்கனவே பெரிய இழப்பை சந்தித்திருக்கிறதென்றால்... , 50 சதவீதக் கட்டணத்தையாவது தள்ளுபடி செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, புயல் பாதித்த பகுதிகளில் விவசாய கடன்களை முற்றிலுமாக ரத்து செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உரையாற்றினார். 

 

 

சார்ந்த செய்திகள்