கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் காசி என்ற அகோரி. உலகம் காத்தான் மற்றும் முரார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிலை ஒன்றை வைத்து அதனைச் சுற்றி எலும்புக்கூடுகளை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அந்த சிலையும் அங்கு வைக்கப்பட்டிருந்த கோயில் மணியையும் உடைத்துச் சேதப்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கிறார். இருப்பினும் அந்த புகார் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காசி நேரடியாக ஆட்சியரைச் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க அரை நிர்வாணமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழை வாயிலிலேயே தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். எனது சிலையை உடைத்தது தொடர்பாக போலீஸ் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் காவல்துறை மற்றும் சிலை திருடியவர்களைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்துடன், உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொண்டு, ஆட்சியர் அலுவலகம் முன்பு பிணத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த நிலையில், அகோரி காசி புறப்பட்டுச்சென்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் அகோரி ஒருவர் அரை நிர்வாணத்துடன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.