கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வெளிமாநிலம், வெளிமாவட்டம் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளனர். இதனால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தவர்களைச் சிறப்பு ரயில் மூலம் திருப்பி அனுப்பும் பணியினை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் டெல்லியிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் (18.05.2020) அதிகாலை திருச்சி வந்தது. தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த 266 பேர், டெல்லியில் நடந்த தப்லீக் மாநாட்டிற்குச் சென்ற 292 பேர் என மொத்தம் 558 பேர் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் இன்று திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
சிறப்பு ரயில் மூலம் அழைத்து வரப்பட்டவர்களில் திருச்சியைச் சுற்றி உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, நாகை, திருவாரூர், மதுரை, தேனி, ஆகிய மாவட்டங்களில் இருந்து 202 பேர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து, ஐந்து சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 64 பேர் இரண்டு சிறப்பு பேருந்து மூலம் சேதுராப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பு மருத்துவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.