சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.
இந்த நிலையில், மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது. அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் புறநோயாளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.