தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நெற்பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய வேண்டுமென்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தியிருக்கும் தமிழ்நாடு வேளாண் நலத்துறை, அதற்கான கடைசி தேதியையும் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வரும் நவம்பர் 15- ஆம் தேதிக்குள் நெற்பயிரைக் காப்பீடு செய்ய வேண்டும். அதேபோல், கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பயிர்க்காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15- ஆம் தேதி கடைசி நாளாகும்.
கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், அரியலூர், தென்காசி, நெல்லை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வரும் டிசம்பர்- 15 ஆம் தேதி பயிர்க்காப்பீடு செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பயிர்க்காப்பீடு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். இது தொடர்பான, மேலும் விவரங்களுக்கு வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வங்கிகளை அணுகுமாறு விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது.