Skip to main content

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்; அதிமுக போராட்டம் அறிவிப்பு! 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
ADMK struggle announcement for New laws brought into force 

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில், “புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும் அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 01.07.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், இந்த 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தித் திணிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நாளை (05.7.2024) நண்பகல் 12 மணிக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை தலைமையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகிகளும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
MR Vijayabaskar house CBCID raids Important documents seized

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி போலி ஆவணங்கள் பதித்து 22 ஏக்கர் நிலத்தை பறித்து கொண்டதாக கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் என 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், போலி ஆவணங்கள் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடும் என்று நினைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், இரண்டு முறை கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் எம்.ஆர். விஜயபாஸ்கர் தங்கியிருக்கும் வீடு, அலுவலகம் என அவருக்கு தொடர்புடைய 12 இடங்களில் இன்று (07.07.2024) சிபிசிஐடி காவல்துறை சோதனை நடத்தினர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 12 இடங்களில் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் பென்டிரைவ் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் (05.07.2024) எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 3 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Chance of rain in 18 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழ்நாட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 18 மாவட்டங்களில் இன்று (07.07.2024) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி, சேவூர்,  ஆதனூர், களம்பூர் மலையாம்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் மழை பொழிந்து வருகிறது. விழுப்பரம மாவட்டத்தில் உள்ள திருவெண்ணை நல்லூர், புதுப்பாளையம், எடையார், மெய்யூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அதனைச் சுற்றியுள்ள திருமயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதே போன்று தமிழகதில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.