2025 ஜனவரி 17, எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், எம்.ஜி.ஆரின் ரசிகரான முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜியைச் சந்தித்தார், சிவகாசி பகுதியில் கம்பங்கூழ் விற்று வாழ்க்கை நடத்திவரும் ஜானகியின் மகள் துர்கா தேவி. இவர், செங்கல்பட்டு கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் நான்காமாண்டு எம்.பி..பி.எஸ்., படித்துவருகிறார். தன் குடும்பத்தின் தற்போதைய நிலைமையை ராஜேந்திரபாலாஜியிடம் துர்கா தேவி கூற, படிப்புச் செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்கினார். தொடர்ந்து உதவுவதாகவும் உறுதியளித்தார்.
சிவகாசியில் உள்ள அய்யப்பன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா ஸ்படிக லிங்க சிவன் சன்னதி திருப்பணி நடைபெற்று வருகிறது. விழா கமிட்டியினர் ஆன்மிக ஈடுபாடு உள்ள ராஜேந்திரபாலாஜியைச் சந்தித்தனர். ரூ.3.30 லட்சம் நன்கொடை வழங்கினார். டேக்வான்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடத்துபவர்களுக்கு ‘மேட்’ வாங்க ரூ.1 லட்சம் நிதியுதவி செய்தார்.
சிவகாசியைச் சேர்ந்த அதிமுக மகளிரணி துணைச் செயலாளர் ஆவுடையம்மாளின் மகன் நல்லதம்பி விபத்தில் சிக்கி படுகாயமுற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அச்சிறுவனை அழைத்துக்கொண்டு ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு வந்தார், ஆவுடையாம்மாள். மருத்துவச் செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்த ராஜேந்திரபாலாஜி, உடனடியாக ரூ.20,000 வழங்கினார்.
திருத்தங்கல் பகுதியில் நாகராஜன் – அருணாதேவி தம்பதியர் வசித்துவந்த வீடு தீ விபத்தில் சிக்கியது. அக்குடும்பத்தின் பரிதவிப்பை அறிந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி உடனடியாக ரூ.30,000 நிதியுதவி வழங்கினார்.
அந்தப் பாட்டிக்கு 80-க்கும் மேல் வயதாகிறது. பெற்ற பிள்ளைகளும், பேரன்களும் கவனிக்காததால், வீட்டு வாடகைகூட கொடுக்க முடியவில்லை. வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சாலையில் நின்று புலம்பினார். அப்போது ஒருவர் “அழாதீங்க பாட்டி.. ராஜேந்திரபாலாஜின்னு ஒருத்தர் இருக்காரு. அவரு வீட்டுக்கு போங்க. நீங்க என்ன கேட்டாலும் தருவாரு..” என்று கூறி, வழி காட்டியிருக்கிறார். திருத்தங்கல்லில் உள்ள தன் வீட்டுக்கு வெளியே மூதாட்டி ஒருவர் அமர்ந்திருந்த காட்சி ராஜேந்திரபாலாஜி கண்ணில்பட, அருகில் வந்து விபரம் கேட்டிருக்கிறார். பாட்டி தன் நிலைமையைச் சொல்லி அழ, வீட்டில் அம்மா வைத்திருந்த காஸ்ட்லியான புதுப்புடவைகளை எடுத்துவந்து பாட்டியிடம் கொடுத்துவிட்டு, “உங்க பேரன் கவனிக்கலைன்னா என்ன? நானும் உங்க பேரன்தான். உங்க காலம் முழுக்க வீட்டு வாடகைய நான் கொடுக்கிறேன். வீட்டுச் செலவுக்கும் நானே பணம் தர்றேன். கவலைப்படாதீங்க..” என்று ஆறுதல் கூறி, கை நிறைய பணமும் கொடுத்தனுப்பினார்.
‘சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மக்களிடமும் பொதுக் காரியங்களுக்கும் தாராளம் காட்டி வருகின்றீர்களே?’ என்று ராஜேந்திரபாலாஜியிடம் நாம் கேட்க “என்ன இப்படி கேட்டுட்டீங்க? எங்க மனசு எம்.ஜி.ஆரோட மனசு. நான் மட்டுமில்ல. உண்மையான எம்.ஜி.ஆர். விசுவாசிகள் எல்லாருக்குமே இந்த மனசு இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம முடிஞ்ச அளவுக்கு மற்றவர்களுக்கு உதவுவாங்க. ஏன்னா.. அந்த அளவுக்கு நல்ல நல்ல கருத்துகளை சினிமா மூலம் மக்கள் மனசுல விதைச்சிருக்காரு. எம்.ஜி.ஆரோட பிறந்தநாளான இன்னைக்கு, அவரைப் பற்றிய ஒரு விஷயத்தைச் சொல்லுறேன். இன்றைய தலைமுறையினருக்கு இதெல்லாம் தெரியாது.
அந்தக் காலத்துல, நான் உள்பட, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலரோட குடும்பமும் கஷ்டத்துலதான் இருந்துச்சு. வெள்ளந்தியான மனசும்.. ஏழ்மையுமே எம்.ஜி.ஆர். ரசிகர்களோட நிரந்தரச் சொத்தா இருந்துச்சு. எம்.ஜி.ஆர். படம் ரிலீஸாகும்போது, முதல் நாள் முதல் ஷோ பார்த்துடணும்னு மனசுகிடந்து தவிக்கும். ஆனா.. சினிமா டிக்கட் எடுக்க கையில காசு இருக்காது. அந்த நேரத்துல ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மக்கள்கிட்ட பரவிட்டு இருந்துச்சு. எம்.ஜி.ஆர். நடிச்ச புதுப்படம் ரிலீஸாகும்போதெல்லாம் ரத்ததானம் பண்ணுறவங்க எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு. மருத்துவர்கள் மூலம் இந்த விஷயம் தெரிஞ்சதும் எம்.ஜி.ஆர். பதறிட்டாரு. ‘நான் நடிச்ச சினிமாவை பார்க்கிறதுக்காக உங்க ரத்தத்தை விற்கக்கூடாது. பணம் இல்லைன்னா.. எனக்கு தந்தி கொடுங்க. நான் பணம் அனுப்பிவைக்கிறேன்’னு சொன்னாரு. சொன்னா ஆச்சரியப்படுவீங்க. சிலர் எம்.ஜி.ஆருக்கு தந்தி கொடுத்ததும், மணியார்டர்ல எம்.ஜி.ஆர். பணம் அனுப்பிவச்சதும் நடந்துச்சு. அப்புறம் வாத்தியார் படம் பார்க்க வாத்தியார்கிட்டயே பணம் வாங்குறதான்னு மனசு தெளிவாகி, உழைச்சு சம்பாதிச்ச பணத்துல எம்.ஜி.ஆர். படத்தைப் பார்ப்போம்கிறதுல ரசிகர்கள் உறுதியா இருந்தாங்க. எப்பேர்ப்பட்ட வள்ளல் தெரியுமா எம்.ஜி.ஆர்.? அவருக்கு முன்னால நாங்கள்லாம் எம்மாத்திரம்?” என்று உணர்ச்சிவசப்பட்டார் ராஜேந்திரபாலாஜி.