சில நேரங்களில் சில தலைவர்களின் பண்பு வியப்புக்குரியதாக இருக்கும். அப்படித்தான், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயலொன்று, பலரையும் வியக்க வைத்துள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள மலைகிராமம் மேலப்பரவு. இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 50 குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியைச் சுற்றிலும், நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியின் குறுக்கே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், குரங்கணி கொட்டகுடி ஆறு செல்வதால், மழைக்காலங்களிலும், பருவ மழைக் காலங்களிலும். ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடும்.
இந்தச் சூழ்நிலையில், இங்குள்ள மக்களும், விவசாயிகளும், விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாமலும், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், ஆற்றைக் கடக்க முடியாமலும், இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அம்மக்கள் வசிக்கின்ற வீடுகளும் மிகவும் சேதமடைந்துள்ளன.
இங்குள்ள மலைவாழ் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிவதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அப்பகுதிக்குச் சென்றார். அங்கு வசிக்கும் 50 குடும்பங்களுக்கு, உடனடியாக புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, உடனடியாக சாலைப் பணிகளை விரைந்து முடித்திட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஓ.பி.எஸ்., ஆய்வுக்காகச் சென்றபோது, ஆற்றில் இறங்கி கடக்க வேண்டியதிருந்தது. அப்போது, தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி, தானே கையில் எடுத்துக்கொண்டு நடந்தார். ‘என்னிடம் கொடுங்க..’ என்று உதவியாளர் கேட்டும் தரமறுத்து, ஒரு கையால் செருப்பைத் தூக்கியபடியே நடந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவர் “பிரயாணத்தின்போது, தன்னுடைய சூட்கேஸைக்கூட, உதவியாளர் யாரையும் தூக்கவிட மாட்டார். ஆறோ, நதியோ, அதன் புனிதத்தைக் காக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். செருப்பு அணிந்துகொண்டு, ஆற்றில் இறங்க மாட்டார். நீர்ப்பகுதிகளில் வெறும் காலால்தான் நடப்பார். குரங்கணி கொட்டகுடி ஆற்றைக் கடந்தபோதும், அவ்வாறே நடந்துகொண்டார். அவரைப் பொறுத்தமட்டிலும், இது ஒன்றும் செயற்கரிய செயலல்ல. பொதுவான அவரது இயல்பே இதுதான்!” என்றார்.
ஒரு சில நடவடிக்கைகளில், மற்ற அரசியல் தலைவர்களிலிருந்து மாறுபட்டு, ஓ.பன்னீர்செல்வம் மட்டும் தனித்து தெரியும்போது, ‘சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ என்ற ஔவையின் மூதுரை பொருந்திப் போகிறது.