சில மாதங்களுக்கு முன்பு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் வகித்து வந்த துறையை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக பார்த்து வந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன், சில நாட்களுக்கு முன்பு திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய தகவல் தொழில்நுட்ப துறையை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூடுதலாக கவனித்து வருகிறார். இந்த இரண்டு அமைச்சர்களும் கூடுதல் துறைகளை கவனித்து வருவதால் நிர்வாக ரீதியாக சிக்கல்கள் நிலவுவதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இரண்டு துறைகளுக்கும் புதிய அமைச்சர்களை விரைவில் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பல முக்கிய அதிமுக எம்.எல்.ஏக்கள் போட்டியில் குதித்திருக்கிறார்கள். மதுரையை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ காலை, மாலை என ஈபிஎஸ் தரப்பிடம் அமைச்சர் பதவி வேண்டி நச்சரித்து வருவதாகவும் சொல்லப்பட்டுகிறது. ஒருபுறம் துணை முதல்வரிடம் சிலர் அமைச்சர் பதவிக்காக காய் நகர்த்திவரும் நிலையில், மற்றொரு பக்கம் பன்னீர் செல்வத்தை பகைத்து கொள்ளாமல் தன்னிடம் சிபாரிசுக்கு வருபவர்களுக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுப்பது என்று குழப்பத்தில் எடப்பாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.