இந்தியாவில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் சமீபகாலமாக தமிழகத்தில் மோதிக்கொள்கின்றன. தற்போது அதிமுக - தமிழக பாஜக இடையே அடிக்கடி வார்த்தை போர் நிலவி வருகிறது. தமிழக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் தலைவரான ஜெயலலிதா குறித்து பேசியது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்கள் பாஜக மீதும், அண்ணாமலை மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். பின்னர் இருகட்சித் தலைவர்களையும் அழைத்து டெல்லி தலைமை பேசிய பிறகு வார்த்தைப் போர் சற்று தணிந்திருந்தது. இது தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது.
அதையடுத்து, சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்தும் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வந்தனர். இறுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை; கட்சி முடிவையே நான் சொல்கிறேன். தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்குத் தான் பாதிப்பு. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நோட்டாவை கூட தாண்ட முடியாது. பா.ஜ.க.வுக்கு காலே இல்லை; எப்படி தமிழ்நாட்டில் காலூன்றும்? என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான், பா.ஜ.க.வுடன் கூட்டணியும் கிடையாது, ஒரு புண்ணாக்கும் கிடையாது என்று அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் பேசியது கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு ஆகிய 3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், வேலுமணி, கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அருண்குமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம், அண்ணாமலை பேச்சுகள் தொடர்பாக செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அப்போது வேலுமணி, அந்த கேள்வியை தவிர்த்து எழுந்து சென்றார். இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் செய்தியாளர் ஒருவரை அழைத்து, “கூட்டணியும் கிடையாது, ஒரு புண்ணாக்கும் கிடையாது” என்று கூறிச் சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.