
நேற்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்மையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று மார்பிங் செய்யப்பட்டு ரசிகர்களால் மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதற்கு அதிமுக சார்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லையே எனக் கேட்டதற்கு,
''அதெல்லாம் சின்ன பிள்ளைகள் செய்கிறது. அந்த சின்ன பசங்க மனசுலயும் எங்க தலைவரும் அம்மாவும் பதிந்து இருக்கிறார்கள். எனவே அதைப்பற்றி நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விஜய்யை பொருத்தவரை நல்ல நடிகர், நல்ல வளர்ந்து வரக்கூடிய தமிழன். இந்த அளவுக்கு வளர்ந்து வருகிறார் என்றார்.
நீட் தேர்வு தமிழகத்திற்கு வர முழு காரணமே திமுக-காங்கிரஸ் கூட்டணி தான். இப்பொழுது மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தீர்மானம் போட்டு இருக்கிறோம். முறைப்படி முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா இருக்கும்பொழுதும் முறைப்படி செய்தார்கள். ஒன்றை மட்டும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடும். அவங்க காலத்தில்தான் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இங்கு அது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்கள் பரோலில் வருவதற்கு யார் முயற்சி எடுத்தது. திமுக ஆட்சியில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் இருந்த பொழுது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெயலலிதாதான் தூக்குக்கு சென்றவர்களை காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே திமுக சொல்வதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தவில்லை'' என்றார்.