சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வைத் தற்போதைய கரோனா சூழலில் நடத்துவதன் நன்மை, தீமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
“மாணவர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் மிகவும் முக்கியம்; இதில் சமரசம் செய்ய முடியாது. இந்த ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. நெருக்கடி மிகுந்த இந்த தருணத்தில் தேர்வெழுத மாணவர்களை நிர்பந்திப்பது சரியாக இருக்காது. தேர்வெழுத விரும்பும் மாணவர்களுக்கு நிலைமை சீரடைந்தப் பின், அதற்கான வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் தேர்ச்சியைக் குறித்த காலத்திற்குள் சி.பி.எஸ்.இ. முடிவு செய்து அறிவிக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு தேர்வு ரத்து முடிவு எடுத்தது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.