திண்டுக்கல்லைச் சேர்ந்த மீரான் பாபு என்பவர் வடக்கு பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவருடைய நண்பர் விஜயராஜன். இவர்கள் இருவரும் ஒரு லாட்ஜ் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், மீரான் பாபு மற்றும் விஜயராஜன் இருவரையும் சரமாரியாக வெட்டி, கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விஷயம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமாருக்கு தெரியவர, அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர போலீசார் வழக்குப் பதிவுசெய்து தப்பிச் சென்ற மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். மேலும், இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்துவருகின்றனர்.