டெண்டர் முறைகேடு தொடர்பான, சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று (26/07/2022) விசாரணைக்கு வருகிறது.
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, அதிகாரத்தைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். இதில், 4,800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்றத்திலும் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்து, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12- ஆம் தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்காக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு, கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் 28- ஆம் தேதி இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இவ்வழக்கை விரைவாக விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிடப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு இன்று (26/07/2022) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்க பட்டியலிடப்பட்டது.