Skip to main content

நண்பனுக்கே ஸ்கெட்ச் போட்ட கூட்டாளிகள்; ஏரிக்கரை சம்பவத்தால் உறைந்து போன மீஞ்சூர் மக்கள்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Youth who incident friend in Meenjoor

 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது ராமரெட்டிப்பாளையம் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் அஜித். 25 வயதான இவர் அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தைப் பாதுகாத்து வந்தார். இந்நிலையில், அஜித்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. ராமரெட்டிப்பாளையத்தில் இருக்கும் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம்.

 

அந்த வகையில், கடந்த 16 ஆம் தேதியன்று வீட்டில் இருந்த அஜித் அன்றிரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அஜித்தின் பெற்றோர், ராமரெட்டிப்பாளையத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில், பதற்றமடைந்த அஜித்தின் பெற்றோர் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று தனது மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் காணாமல் போன அஜித் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அஜித்தின் நண்பர்கள் யார்? அவர் கடைசியாக எங்கே சென்றார் எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். 

 

இத்தகைய சூழலில், ராமரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனிடையே, அந்த வழியாகச் சென்றவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த கிணற்றில் சோதனையிட்டபோது, அதில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.  இதையடுத்து, பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் அந்த ஆண் சடலத்தை மீட்டனர். அப்போது, அந்தப் பாழடைந்த கிணற்றில் சடலமாகக் கிடந்தவர் காணாமல் போன அஜித் தான் எனத் தெரியவந்தது. 

 

இதனிடையே, அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அஜித்தின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்துள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த அஜித்தின் பெற்றோர் அவரது உடலைப் பார்த்து கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். அதன்பிறகு, அஜித்தின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தக் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் சில இளைஞர்கள் கூட்டமாகச் சேர்ந்து மது அருந்தினார்கள் என அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான செல்போன் நம்பர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, போலீசார் சேகரித்த செல்போன் நம்பர்களில் அஜித்தின் நெருங்கிய நண்பரான நாகராஜின் செல்போன் நம்பரும் அதே டவரில் பதிவாகியிருந்தது.

 

இதையடுத்து, அஜித்தின் நண்பர்களான ராமரெட்டிப்பாளையம் பச்சையம்மன் நகரைச் சேர்ந்த 21 வயது நாகராஜ், வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் உள்பட மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், சம்பவத்தன்று அஜித் தனது நண்பர்களான நாகராஜ், மோகன், சாய், கணேஷ், வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் உள்பட அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அந்த நேரத்தில், மது போதையில் இவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென ஆத்திரமடைந்த நண்பர்கள் அஜித்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, அஜித்தின் கை கால்களைக் கட்டி உடலைக் கிணற்றில் வீசி விட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலையாளிகளான நாகராஜ், வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில், தலைமறைவாக உள்ள மேலும் 3 நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களைக் கைது செய்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். தற்போது, மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டிக்கொலை செய்து கிணற்றில் வீசியது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

சார்ந்த செய்திகள்