கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியில் கோவை குனியமுத்தூரில் உள்ள வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றன.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 7 பேர் மற்றும் 10 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி)- கூட்டுச் சதி, 420- மோசடி, 409- நம்பிக்கை மோசடி, 109- அரசு ஊழியர் லஞ்சம் பெற்றுக் கொண்டு சாதகமாகச் செயல்படுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை சட்டமன்ற விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை நீட்டித்த நிலையில், தற்போது நிறைவடைந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணினிகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியதாகத் தகவல் கூறுகின்றன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான சந்திரபிரகாஷ் என்பவரின் கே.சி.பி. நிறுவனத்திலும் சோதனை நிறைவடைந்தது.
தமிழகத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான 60 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இதில் சென்னையில் ஒரு இடத்திலும், கோவையில் இரண்டு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நிறைவடைந்துள்ளது.