“தேர்தல் நன்னடத்தை விதிகள் எல்லோருக்கும் பொதுவானதா?”
“அதிலென்ன சந்தேகம்?”
“ஆளும்கட்சியினருக்கு..”
“ஆமாம்..”
“முதலமைச்சருக்கு..”
-விருதுநகரில் இந்தக் கேள்விக்கு உடனடியாக ‘ஆமாம்..’ சொல்லவில்லை, தேர்தல் கண்காணிப்புக் குழுவினர். அப்படியென்றால், என்ன நடந்தது?
பிப்ரவரி 26- ஆம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. அதனால், அனைத்துத் தலைவர்கள் சிலையும் துணியால் மூடப்பட்டன. இப்பணியை, தேர்தல் அதிகாரிகள் செய்தனர். விருதுநகரிலும் எம்.ஜி.ஆர். சிலையை துணியால் மூடியிருந்தனர்.
விருதுநகர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் வந்தார். கருமாதி மடம் ஏரியாவிலுள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகில், அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது, மூடப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை எடப்பாடி கண்ணில் பட்டால் நன்றாகவா இருக்கும்? என்று சீரியஸாக சிந்தித்தனர், ஆளும் கட்சியினர். உடனடியாக அந்த எம்.ஜி.ஆர்.சிலையை திறந்துவைத்து மாலை அணிவித்தனர். தேர்தல் கண்காணிப்பு குழுவினரும், காவல்துறையினரும், இந்த நன்னடத்தை விதி மீறலை, அந்த நேரத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமியும், பிரச்சாரம் செய்துவிட்டு கிளம்பினார்.
பிறகென்ன? நிலைக் கண்காணிப்பு குழுத்தலைவர் மோகராஜ் புகார் அளிக்க, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கண்ணன் மீது விருதுநகர் பஜார் காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, செவ்வனே கடமையாற்றினர்.