விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், 'இன்று அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒன்று கூடி விவாதித்ததின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக எப்படி இருந்தாலும் சரி இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி குறிப்பாக திமுக அராஜகத்தையும் அநியாயத்தையும் கட்டவிழ்த்துவிட்டு ஒரு போலியான வெற்றியைப் பெறுவதற்கான எல்லா விதமான செயல்களையும் செய்வார்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். அதுபோல பணத்தை முழுமையாக செலவு செய்து ஒரு போலியான வெற்றியைப் பெறுவார்கள். அதன் அடிப்படையில் ஜனநாயக ரீதியாக இந்த தேர்தல் நடைபெறாது. ஈரோட்டில் எவ்வளவு பெரிய அளவுக்கு அராஜகம் நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இந்தத் தேர்தலிலும் நிச்சயமாக திமுகவினர் அராஜகம் பண்ணுவார்கள், அநியாயம் பண்ணுவார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் மக்களை திமுகவினர் அடைத்து வைத்தனர். அந்த வகையில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்கு எல்லாம் முயற்சி செய்வார்கள். எனவே இந்த தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'தேர்தலில் போட்டியிடாதது அதிமுகவிற்கு பின்னடைவை கொடுக்காதா?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ''இதேபோல 2009 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்தார். திமுக கொள்ளையடித்த பணத்தை எல்லாவற்றையும் இறக்கி வெற்றி பெற்றார்கள். ஆனால் 2011 இல் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வராமல் போய்விட்டோமா?'' என்றார்.