திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. வாசன், “தமிழ் மாநில காங்கிரசை பொறுத்தவரை தமிழகத்தில் தற்பொழுது யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் மட்டுமல்ல பாமக, தேமுதிக எந்த கட்சியும் தற்போது யாருடனும் கூட்டணி கிடையாது. தமிழ் மாநில காங்கிரசை பொறுத்தவரை ஜனவரி மாதம்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம். தற்பொழுது நாங்கள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் நட்பு கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜோசியம் சொல்ல முடியாது. வட மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்றால் சரியான வியூகம் தேவை. ஒத்த கருத்தோடு கடைப்பிடித்தால் எதிரியை வீழ்த்தலாம். கட்சிகள் யார் எந்த கூட்டணியில் சேர்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியாது.
டெல்டா பகுதியில் பெய்து வரும் திடீர் கனமழையினால் பல ஏக்கர் விலை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இது வேதனை தருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு துணை நிற்க வேண்டும். இழப்பீடு குறித்து வருவாய்த்துறையினரை வைத்து அளவீடு செய்து அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் நியாயமான கோரிக்கைகளுக்கு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் ரத்து செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என த.மா.கா. சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்.
தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் காய்ச்சல், வைரல் ஃபீவர், ப்ளூ காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மாவட்ட தலைநகர் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா அளவில் தடையில்லாமல் மருத்துவ வசதி செய்து தர வேண்டும். தேவையான அளவு மருந்துகளை வழங்க வேண்டும்” என்று கூறினார். இதில் முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சித்தன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.