தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதிக் கட்ட பிரச்சாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பிரச்சாரத்தை தாண்டி வாக்காளர்களுக்கான வைட்டமின் "ப" என்பது தேர்தலில் அத்தியாவசியமாக மாறிவிட்டது.
திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை தற்போது இந்த வைட்டமின் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய சக்தியாக மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் எல்லா நிலையிலும் உள்ள பொறுப்பாளர்கள் தங்களால் முடிந்த வரை சம்பாதித்து பணத்தை சேர்த்து வைத்துள்ளனர். எனவே தற்போது நடைபெறக்கூடிய இந்த உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தப்பட்டு இருக்கக்கூடிய அதிமுக வேட்பாளர்கள் வைட்டமினை தண்ணியாக செலவு செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். வீடு தேடி சென்று ஓட்டுக்கு 500 ரூபாய் நேரடியாக வேட்பாளரை கொடுக்கும் அளவிற்கு அதிமுக பண பலத்தை நம்பி இந்த தேர்தலை சந்திக்கிறது.
ஆனால் திமுக சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் செலவு செய்வதற்கு தயக்கம் காட்டி வருவதால் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கக் கூடிய இடத்தில் தற்போது பணம் தான் முக்கிய அங்கம் பெற்றுள்ளது. திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திருச்சியை சேர்ந்த திமுக வேட்பாளர்கள் நேர்காணலில் பங்கேற்றபோது தாங்கள் கோடிகளில் லட்சங்களில் செலவு செய்வோம் என்று வாக்குறுதி அளித்து தற்போது களத்தில் இருக்கக்கூடிய திமுக வேட்பாளர்கள் பலர் செலவு செய்வதற்கு யோசிப்பதாக தொகுதி வாசிகள் புலம்புகின்றனர்.