புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தின கூட்டத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி மீதும், ஆளும் அரசு மீதும், புதுச்சேரி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் ஒரு காரணம்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மத்திய அரசை நம்பிதான் புதுச்சேரி மாநிலம் உள்ளது. பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன். அப்போது பிரதமரை சந்திந்து புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவேன். பிரதமர் எல்லா மாநிலங்களையும் சமமாக பாவிப்போம் என கூறியுள்ளார். பா.ஜ.க அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரண்பாடும் இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் திட்டங்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க அரசுடன் இணைந்து புதுச்சேரி மாநில அரசு செயல்படும்” என்றார். மேலும் அவர், “புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்த நிறுவனம் மற்றும் மத்திய அரசு முயற்சித்தால் அதனை தடுத்து நிறுத்துவோம்” என உறுதியாக கூறினார்.