சென்னை தரமணியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 57). இவரது கணவர் சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதன்மூலம் அவருடைய ஓய்வூதிய பணம் பரமேஸ்வரிக்கு கிடைத்துள்ளது. இதனையறிந்து கொண்ட அவரது கணவரின் நண்பரும் அதிமுக பிரமுகருமான குணசேகர் (வயது 70) பரமேஸ்வரியை அணுகி மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார்.
வேலை பெற்று தருவதற்காக 15 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பரமேஸ்வரியிடம் இருந்து குணசேகர் வாங்கி உள்ளார். ஆனால் குணசேகர் கூறியது போன்று பரமேஸ்வரிக்கு கடந்த 8 ஆண்டுகளாக வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் இருந்ததால் பரமேஸ்வரி மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பணத்தை திருப்பி தருமாறு பரமேஸ்வரி குணசேகரிடம் கேட்டு வந்த நிலையில் ஆத்திரமடைந்த குணசேகர் பரமேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிமுக பிரமுகர் குணசேகரை நேற்று கைது செய்தனர்.