தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குப்பதிவு மையத்திற்கு அருகே அனுமதிக்கப்பட்ட 5 நபர்களைவிட கூடுதலாக பிற கட்சியினர் இருப்பதாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல, மாற்றுத்திறனாளிகளை கட்சி சார்புடைய ஆட்கள் வாக்களிக்க அழைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் காவல்துறையினரிடமும் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.