செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில், பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் வேளையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து காவல்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (17ம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், மதுவிலக்கு தொடர்பாக 10581 என்ற கட்டணமில்லா எண்ணை மக்களிடையே பிரபலப்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்களைப் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கு புகார் தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கையை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை உள்துறை செயலாளரின் வாயிலாக முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும்” என அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எத்தனை பேர் கைது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தரும்படி தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடம் கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.