வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது. காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி பேரணி நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்த உத்தரவை நீதிமன்றம் மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது விசிக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் 'பேரணிக்கு ஆர்.எஸ்.எஸ் அனுமதி கோரியது உரிமையியல் பிரச்சனை தொடர்பானது. உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கை குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன் பட்டியலிட்டது தவறு. பேரணிக்கு அனுமதி கொடுத்த உத்தரவு தவறானது எனவே உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.