இராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட்ஃபயாஸ், ஜெயக்குமார் உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுக்கலாம் என அறிவித்தது உச்சநீதிமன்றம். அதனை தொடர்ந்து அமைச்சரவை கூடி 7 பேரை விடுவிக்கலாம் என தீர்மானம் இயற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பியது. அதன்மீது அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக கவர்னருக்கு, மத்திய - மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரும் வகையில் கையெழுத்து வாங்கி வருகின்றனர், தமிழ் உணர்வாளர்கள். அதன்படி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள இலங்கை தமிழ்ச் சங்கத்தின் 49ஆம் ஆண்டு விழா கடந்த 3ந்தேதி நடைபெற்றது. அந்த விழாவில், ஏழுபேரின் விடுதலைக்காக உலக தமிழ் அமைப்பு முன்னெடுத்த கையெழுத்து வேட்டையில் ஈழத்தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு தந்தனர்.
பொதுமக்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்தம் அப்படிவங்களை உலக தமிழ் அமைப்பு விரைவில் தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளது. இந்த கையெழுத்து படிவத்தில் உலக தமிழ் அமைப்பு, TGTE, USTPAC, Pearl, NCCT, BTF ( British Tamil Forum), CTC (Canadian Tamil Congress ), NAT( North American Tamils), இலங்கை தமிழ்ச் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டது. அவர்களும் அதில் கையெழுத்திட்டு வழங்கியுள்ளனர்.
தமிழகம் உட்பட உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் ஆகியோர் எழுவர் விடுதலைக்காக குரல் கொடுத்து ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழக கவர்னர் இந்த விவகாரத்தில் மவுனமாக உள்ளார்.