திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பிரமுகர் ஒருவரின் மகள் திருமணத்திற்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வருகை தந்தார். பின்னர் ஆம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக எங்கள் கட்சியின் சார்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம், நாங்கள் வீதிக்கு வரவில்லை. ஜனநாயக நாட்டில் சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளதால் நாங்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளோம். நிச்சயம் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் .
மத்திய அரசாங்கம் பொருளாதாரத் துறையில் தோல்வி அடைந்துள்ளது. மேக் இந்தியா என்று சொல்லி இந்தியாவை உயர்த்துவோம், பொருளாதாரத்தில் முன்னேற்றிக் காட்டுவோம், வேலைவாய்ப்பை தருவோம் என்று சொல்லியது. இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் பெறவில்லை. பொருளாதாரம் தற்போது கீழ் நோக்கி தான் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் ஜிடிபி 7.5% சதவீதம் இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தபின் தற்போது 5.1% சதவீதமாக உள்ளது. மேலும் கீழ் நோக்கி 4.5% சதவீத போகக்கூடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது நடக்க இருக்கின்றது. ஏற்கனவே இருக்கக்கூடிய திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். அந்த கூட்டணி தொடர்கிறது. எங்களுக்கு நாங்கள் கேட்கின்ற மாவட்டங்களில் சீட் வழங்குவதாக கூறியுள்ளார்கள். கூட்டணி வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம்" என்று தெரிவித்தார்.