அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி 2 முறை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 9வது முறையாக நீட்டித்து வருகிற 6 ஆம் தேதி (06.11.2023) வரை நீதிமன்றக் காவலில் இருக்க உத்தரவிட்டார்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதனையடுத்து, உடல்நலக்குறைவு காரணமாக புழல் சிறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூடுதல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், இன்று (20-11-23) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதிஷ் சந்திர சர்மா ஆகியோர் முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டபோது, “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்றும் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ அறிக்கையில் அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கிறது. இது தொடர்பான மருத்துவ ரீதியான குறிப்புகளின் தொகுப்பை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். மேலும், செந்தில் பாலாஜிக்கு மூளை தொடர்பான பாதிப்பு இருப்பதால் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளது. அதனால், மருத்துவ காரணங்களின் அடிப்படையிலும், அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியுள்ளதாலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘எம்.ஆர்.ஐ எப்போது எடுத்தீர்கள்’ என்று கேள்வி எழுப்பிய போது வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, நவம்பர் 15ஆம் தேதிக்கு எடுத்ததாக பதில் அளித்தார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றம், ‘அமைச்சர் செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி தரப்பு சமர்ப்பித்த மருத்துவ ஆவணங்களை நீதிமன்றமும், அமலாக்கத்துறையும் ஆய்வு செய்யலாம்’ என்று கூறி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு விசாரணை வரும் நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.