கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 10 குழுக்களாகப் பிரிந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
இந்தச் சூழலில் தூத்துக்குடியில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடக் கூடுதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அமைச்சர் எ.வ. வேலுவும், சாத்தான்குளம், காயல்பட்டினம் பகுதிக்கு அமைச்சர் பி. மூர்த்தியும், தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கு அமைச்சர் கே.என். நேருவும், அதே சமயம் தூத்துக்குடியின் இதர பகுதிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் மீட்புக் குழுவினர் விரைகின்றனர். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இருந்த தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து இந்த 10 குழுவினரும் தூத்துக்குடியில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (20.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.