கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் நேற்று முன்தினம் (27.10.2021) இரவு பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து அமைச்சர்களும், பல்வேறு அரசியல் பிரமுகர்களும் நேரில் வந்து பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிச் செல்கின்றனர். இந்நிலையில், 27ஆம் தேதி தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அப்பகுதியைப் பார்வையிட்டதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதனை உயர்த்தி 10 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும். படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அவர்களுக்கும் நிவாரணத் உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாத அளவில், மாவட்ட நிர்வாகம் முறையான ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவருடன் மாவட்டத் தலைவர் பாலசுந்தரம், வழக்கறிஞர் பிரிவு செல்வநாயகம் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.