தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். அத்துடன், புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த 26 ஆம் தேதி சட்டமன்றத்தில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் 2021 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களின் முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கலை பாடப்பிரிவுகளில் 25 சதவிகிதம் கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிவியல் பாடப்பிரிவுகளில் கல்லூரி ஆய்வக வசதிக்கு ஏற்ப கூடுதலாக 25 சதவிகித சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 145 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை அதிகரிக்கும் நிலை உருவாகும். இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்குப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதிபெற வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.