கதாநாயகி, குணச்சித்திர வேடம் என தென்னிந்திய சினிமாவில் தனக்கென இடம் பிடித்தவர் பானுப்ரியா. அண்மையில் சில படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்திருந்தார். இந்தநிலையில் நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 14 வயது சிறுமியின் தாய் ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் “பொருளாதார ரீதியாக மிகவும் கீழ்நிலையில் இருக்கும் நான் என்னுடைய 14 வயது மகள் சந்தியாவை, திரைப்பட நடிகை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். மாதம் ரூ.10,000 கொடுப்பதாக உறுதியளித்து என் மகளை அழைத்து சென்றனர்.
ஆனால் கடந்த 18 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. சமீபத்தில் வேறு ஒருவரின் மொபைல் போன் மூலம் பேசிய என் மகள் சந்தியா, பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவர் தன்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார், அடிக்கிறார் என்று கூறினார். இதைப்பற்றி கேட்பதற்காக பானுப்ரியா வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கிருந்தவர்கள் உன்னால் முடிந்ததை செய்துகொள். எங்களிடம் பணம், செல்வாக்கு உள்ளது. உன் மகள்மீது திருட்டு குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம். எனக்கூறி என்னை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிவிட்டனர். காவல்துறைதான் இதில் தலையிட்டு நீதி கிடைக்க உதவவேண்டும் எனக் கூறியிருந்தார்.
பிரபாவதியின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறை பானுப்ரியா மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.